உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

உயிர்ப்பின் அனுபவம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்முடைய “உயிர்ப்பு வாழ்வுக்கு” முன் அடையாளமாகவும், நமக்கு நம்பிக்கை “ஏற்படுத்துவதாகவும் அமைகிறது”. இயேசு கிறிஸ்து மிகுந்த பாடுகளையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் ஏற்றுக்கொண்டு, அதையே உயிர்ப்புக்கு விலையாகக் கொடுத்தார் - 1கொரி 7:23. பாடுகளும், துன்பங்களும், கஷ்டங்களும் பயனுள்ளது. அதற்குரிய பயனும் மிக உயர்ந்ததே. “இறந்த பின்பு வாழ்வு” என்பதே அவற்றின் பயன். “பாடுகளுக்குப் பின்பு மகிமை” என்பது நமக்கு நிச்சயம் உண்டு. 



இயேசுவுடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும், அப்போது அவருடைய மகிமையில் நமக்கு பங்கு கிடைக்கும் - உரோ 8:17. நாம் நம்முடைய அன்றாடப் பாடுகளை ஏற்றுக்கொள்ளும் போது, இயேசு அவருடைய மகிமையில் நமக்கு பங்கு தருகின்றார். நாம் நம்முடைய அன்றாடப் பாடுகளை, விரும்பி ஏற்றுக்கொண்டால், நாம், இயேசுவுடைய உயிர்ப்பின் அனுபவத்தில் வாழ்ந்து, அனேகரை பாவத்திலிருந்து விடுவித்து, உயிர்த்த மக்களாக உருவாக்க முடியும், என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.



பாடுகளுக்கு எல்லை உண்டு


இயேசுவுடைய மரணத்தின் சாயலோடு நம்மை பொருத்தி இணைத்தால், அவருடைய உயிர்ப்பின் சாயலோடு பொருத்தி இணைக்கப்படுவோம் என்று, உரோ 6:5-ல் பவுல் கூறுகின்றார். பக்தியோடு கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கின்றவர்கள் அனைவரும் துன்புறுத்தப்படுகின்றனர் - 2திமொ 3:12. ஆனால் பாடுகளும், துன்பங்களும், வேதனைகளும் என்றென்றும் நம்மோடு நிலைத்திருப்பதில்லை. அதற்கு ஒரு எல்லை உண்டு. “இந்த உலகத்தில் உங்களுக்கு துன்பம் உண்டு. ஆயினும் அஞ்சாதீர்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” - யோவா 16:33. இது நமக்கு உயிர்ப்பு நாளின் நிகழ்ச்சியை தெளிவுபடுத்துகின்றது. உயிர்ப்பின் நாளில் நாம் சந்தோஷம் அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் பாடுகளுக்குப் பின் மகிமை உண்டு, என்பதை உணர்ந்து மனநிறைவு அடைய வேண்டும்.



பாடுகள் உயிர்ப்பின் அனுபவம்


பாவத்திற்கு அடிமைப்பட்ட நிலையில், பாவம் கெம்பீரத்தோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிற இந்த உலகத்தில், பரிசுத்தமாக வாழ்கின்றவர்களுக்கு பாடுகள் உண்டு - தி.தூ 9:16. இந்த உலகத்தோடு நமக்குள்ள உறவுகளை முறித்து விட்டு, தேவனோடும், பரலோகத்தோடும் உள்ள உறவை உருவாக்கி வாழ ஆரம்பிக்கும் போது, பாடுகள் வருகின்றன. பாடுகளுக்குள் இருக்கும்போது ஒரு விசுவாசி மகிமையின் வாழ்க்கையை கண்டு கொள்வார். ஒரு விசுவாசியால் மட்டுமே, உயிர்ப்பின் மகிமையை அனுபவிக்க முடிகிறது - யோபு 1:21. உலகத்தில் வாழ்கின்றவர்களுக்கு உயிர்ப்பின் மகிமையை அனுபவிக்க முடியாது - யோபு 2:9.

உயிர்த்த மனிதர், ஒரு புதிய வட்டத்திற்குள் தம்மை கையளிக்கின்றார். உயிர்த்தவர்கள் ஒரு வட்டத்திற்குள் வாழ வேண்டும் என வேதம் கற்று தருகின்றது - 2திமொ 2:22,23. இந்த வட்டம் என்று சொல்வது, நம் சுய விருப்பம், கடவுளுடைய விருப்பத்துக்கு கட்டுபட்டு வாழும் வாழ்க்கை - லூக் 18:11. நம் பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பி, கர்த்தருக்குள் நம்மை அடக்கம் செய்யும்போது, உயிர்ப்பின் வாழ்க்கை ஆரம்பிக்கின்றது - லூக் 1:38. உயிர்ப்பின் வாழ்க்கைக்குள் மூன்று விதமான நிலைகள் காணப்படுகின்றன.


1.போராட்டத்தின் நிலை

முதல் நிலையில் மாமிசத்தோடு (சரீரத்தோடு) போராட்டம் ஏற்படுகின்றது. அபிஷேகம் பெற்ற பின்பும், உயிர்த்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, பாவக்கறை நம்மை அழுத்துவதால், மனம் போராடி கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுத்துக் கொண்ட முடிவுகளில் நிலைத்திருக்க முடியாமல், சலனமும், சஞ்சலமும் ஏற்பட செய்து, பாவகட்டுகள் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது - உரோ 7 : 24,25. இவ்வாறு பாவகட்டுகளை கண்டு பயப்படுகிறவர்களுக்கு இரண்டாம் நிலை உதவி செய்கின்றது.


2. பாடுகளை ஏற்கும் நிலை:

நாம் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் வருகின்ற பாடுகளை மகிழ்வோடு ஏற்றுகொள்ளும்போது, நமக்குள் இருக்கின்ற மாமிசக் கட்டுகள், சரீர - சுபாவ குழப்பங்கள், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து செத்துப் போகும். விசுவாசிகள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, இந்த நிலையில் கடந்து சென்றால், உயிர்த்த வாழ்வு வாழ்கின்றார்கள் - 2கொரி 4:11. நம்மை தீய சக்திகள் மேற்கொள்ளாமல், ஜெயம் பெறுவோம்.


3. உயிர்ப்பின் நிலை:

பாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் உயிர்ப்பின் நிலையை அனுபவிக்கிறோம். உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். மனதிற்குள், உணர்வுப்பூர்வமாய் எடுத்து கொள்கின்ற முடிவிற்குள் இந்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது. எந்த துன்பத்திலும், கஷ்டத்திலும், வேதனையிலும் நன்றி! ஸ்தோத்திரம்! ஆமென்! சொல்லும்போது “உயிர்ப்பை” நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம் - 1தெச 5:18.



மேலுலகில் உள்ளவற்றை நாட வேண்டும்
ஏசா தன்னுடைய சுய சுதந்திரத்தை, உலக ஆசீர்வாதங்களுக்காகவும், உலக இன்பங்களுக்காகவும் யாக்கோபினிடத்தில் கையளித்தான். பாவத்திற்கு அடிமையானான் - எபி 12:16.

இந்த உலகத்திற்கு அடுத்தவற்றில் மனதை செலுத்தாமல், மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள் - கொலோ 3:1. மேலுலகத்திற்கு உரியவை எல்லாம், வேதத்தில் இருக்கின்றன. கடவுளையும், அவருக்கு விருப்பமானவற்றையும் நாடுங்கள் - மத் 6:33. மனிதர்கள் தங்களை கடவுளிடத்தில் முற்றிலும், கையளிக்கும்போது, தங்களை பரிசுத்தப்படுத்துகிறார்கள். அதோடு கடவுளுடைய ஒழுக்க நெறிகளையும், திருச்சட்டத்தையும் கடைபிடித்து வாழ்கிறார்கள். மனதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, கடவுளின் விருப்பப்படி வாழும்போது உயிர்த்த வாழ்க்கை வாழ்கிறோம்.



உலகிற்கடுத்தவை சாகடிக்கப்பட வேண்டும்
உலகிற்கடுத்தவையான பரத்தமை, ஒழுக்ககேடு, பேராசை ஆகியவை சாகடிக்கப்பட வேண்டும் - கொலோ 3:5. இப்போது நாம் பாவம் செய்யாமல் இருக்கலாம். நம்முடைய பழைய பாவங்கள் பாவக்கறையாக நம் ஆத்மாவில் படிந்து இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த பாடுகளை ஏற்றுக் கொள்வோம். தேவன் விரும்புவதை செய்யும்போது நாம் பரிசுத்தமடைகிறோம். அன்றாட பாடுகளை ஏற்று கொள்வதால், பாவக்கறைகள் போக்கப்படுகின்றன - மத் 16:24, எபி 9:22. துன்ப வேளையில் ஆவியின் கனிகளில் நிலைத்திருப்பதாலும், ஆத்தும பாரத்தோடு பிறருடைய மீட்புக்காக பரிந்து பேசி ஜெபிப்பதாலும், நம்மில் உலகிற்கடுத்தவை சாகடிக்கப்படுகின்றன.

ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாடுகின்ற ஒரு மனிதருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டம் போட்டு கொடுக்கின்றார்கள். அதற்கு வெளியே சென்றால் அவுட் என்று கூறி வெளியே தள்ளுகின்றார்கள். மாறாக, அதன் விதிகளுக்கு உட்பட்டு விளையாடும்போது, வெற்றி கிடைக்கின்றது - 1கொரி 9:24,25. உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று முற்றிலும் மாற்றம் அடைவதாக - உரோ 12:2. உயிர்ப்பின் வாழ்க்கை நம்மில் செயலாற்ற பாவ அழுக்குகளை துடைப்போம். மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்கு தகுதி உள்ளவராக எண்ணப்படுவோர் பெண் கொள்வதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. இனிமேல் அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாக இருப்பார்கள். உயிர்த்த மக்களாக வாழ்கின்றனர் - மத் 22:30. அவர்கள் தங்களுடைய சுய சுதந்திரத்தை இயேசு கிறிஸ்துவினிடத்தில் கையளித்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஞானஸ்நானத்தின் வழியாக நீங்கள் அவரோடு புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறந்தோரிடமிருந்து அவரை உயிர்த்தெழ செய்த, கடவுளின் ஆற்றல் மீது கொண்ட விசுவாசத்தால், அவரோடு நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள் - உரோ 6:3. பாடுகளில் இயேசுவோடு நிலைத்திருந்தால், உயிர்த்த வாழ்வில் அவரோடு நிலைத்திருப்போம்.



பழைய வாழ்வை முழுமையாக விட்டுவிடுதல்
ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை அறிய செய்யும் அறிவினால், உலக தீட்டிலிருந்து தப்பியபின், இவர்கள் மீண்டும் அதில் சிக்கி அதனால் வெல்லப்பட்டால், இவர்களுடைய பின்னைய நிலை, முன்னைய நிலையிலும் மோசமானதாகும் - 2பேது 2:20. உலகத் தீட்டிலிருந்து தப்பிய நாம், மீண்டும்; பேயின் விருப்பத்திற்கு அடிமைப்பட்டால் முந்திய நிலையை விட பிந்திய நிலை மோசமானதாகும். தான் கக்கியதை தின்ன நாய் திரும்பி வரும் என்னும் பழமொழி உண்மையாகிறது. கழுவிய பின் பன்றி மீண்டும் சேற்றிலே புரளும் என்றும் கூறப்படுகிறது. - 2பேது 2:22. உயிர்த்த வாழ்வுக்கென்று தங்களை கையளித்தவர்கள், மீண்டும் பழைய வாழ்வுக்கு தங்களை உட்படுத்தி கொள்வதால் ஏற்படும் தீமையை குறித்து, இவ்வாறு வேதம் எச்சரிக்கின்றது.



மூன்று இளைஞர்களின் உயிர்ப்பின் அனுபவம்
நெபுகத்னேசர் அரசன் அறுபது முழ உயரமும், ஆறுமுழ அகலமும் உள்ள பொற்சிலை ஒன்றை செய்து, பாபிலோன் நாட்டிலுள்ள தூரா என்ற சமவெளியில் நிறுத்தி வைத்தான் தானி 3:1. எல்லா நாட்டினருக்கும், மொழியினருக்கும் அறிக்கை ஒன்று வெளியிட்டான். பலவிதமான இசைக்கருவிகள் ஒலிக்க தொடங்கும் நேரத்தில், எல்லோரும் நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையை கீழே வீழ்ந்து பணிந்து தொழ வேண்டும். எவராகிலும் கீழே வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அந்நேரமே எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள் என்று கூறியிருந்தான் - தானி 3:6.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்ற மூன்று இளைஞர்கள் மட்டும் நெபுகத்னேசர் நாட்டிய பொற்சிலையை பணிந்து தொழவில்லை. இதை அரசனுக்கு தெரியப்படுத்தினார்கள். அரசன் மூன்று இளைஞர்களிடமும் ஏன் பொற்சிலையை பணிந்து தொழவில்லை என கோபத்தோடு கேட்டான். அந்த மூன்று இளைஞர்களும் ஜீவனுள்ள தேவனை, தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று, வழிபட்டு வந்தனர். அவர்கள் அரசனிடம், “அரசே நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள் எரிகிற தீச்சூளையினின்றும், உம் கைகளினின்றும் எங்களை காப்பாற்றி மீட்க வல்லவர். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம். நீர் நாட்டிய பொற்சிலையை தொழமாட்டோம்” என்றார்கள் - தானி 3:18.




என்ன துணிச்சல் பாருங்கள்! அந்த மூன்று இளைஞர்களும் உயிர்ப்பின் அனுபவத்திற்குள் தினமும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அன்றாடப் பாடுகளை நன்றி! ஸ்தோத்திரம்! ஆமென்! சொல்லி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள். எனவே தான், மரணமே ஏற்பட்டாலும் பயப்படாமல் துணிந்து பாடுகளை விரும்பி ஏற்றார்கள். பாடுகளை தங்களுடைய பாவக்கறையைப் போக்க, பரிகாரமாய் எடுத்துக்கொண்டார்கள். துன்பங்கள், பாடுகள், வேதனைகளில் கடவுளுடைய விருப்பப்படி வாழ்ந்து, கடவுளுடைய ஒழுக்க நெறிகளையும் சட்டங்களையும் கடைபிடித்தார்கள். 

இவ்வாறு பாடுகளை ஏற்றுக்கொண்டபோது, மேலும் பரிசுத்தமடைந்தார்கள். சாதாரணமாக சூடாக்குவதை விட ஏழுமடங்கு தீச்சூளையை அதிகமாக சூடாக்கியபோதும், நெருப்பு அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தம் அமைச்சரை நோக்கி, மூன்று பேரைத்தான் நெருப்பினுள் கட்டி எறிந்தோம். இப்பொழுது கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்குபேர் உலவுவதை காண்கிறேன் என்றான் - தானி 3:25.

நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து, “உன்னத கடவுளின் ஊழியர்களே! வெளியே வாருங்கள்” என்றான். மூன்று இளைஞர்களும் தீயினின்று வெளியே வந்தனர். சிற்றரசர்களும் அதிகாரிகளும், ஆளுநரும், அந்த மூன்று இளைஞர்கள் தீயில் போடப்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ அதே போல் தோற்றமளித்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர் - தானி 3:27. அரசனும், அந்நாட்டு மக்கள் அனைவரும் உயிர்ப்பின் கடவுளை ஏற்றுக் கொண்டார்கள். பொற்சிலையை வணங்குவதை விட்டுவிட்டு ஜீவனுள்ள தேவனை வழிபடத் தொடங்கினர். 



மதலேன் மரியாள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம்


மதலேன் மரியாள் பாவகட்டுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் பாவி என எல்லோரும் அறிந்திருந்தார்கள். அவள் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தபோது, ஒரு புதிய வாழ்க்கைக்கு தன்னை ஆயத்தப்படுத்தினாள். தன்னுடைய சுய சுதந்திரத்தை, உலக ஆசைகளிலிருந்தும், உலக இன்பங்களிலிருந்தும் விடுவித்து இயேசுவுக்கு தன்னை முழுமையாக கையளித்தாள்.

மேலும், இயேசு கிறிஸ்துவை சந்தித்த நாளிலிருந்து, இயேசு காட்டிய வாழ்வின் பாதையில், ஒரு கட்டுபாட்டுக்குள் தன்னை வைத்துக் கொண்டாள். “இனி மேல்பாவம் செய்யாதே” என இயேசு எப்போது கட்டளையிட்டாரோ அந்த நேரத்திலிருந்தே, தன் முழு மன சுதந்திரத்தையும், இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்படிய தன்னை கையளித்தாள் - யோவா 8:1.

மதலேன் மரியாள் புறப்பட்ட பாதையிலிருந்து திரும்பாமல், புறப்பட்ட பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்று அவர் விருப்பப்படி வாழ்ந்தாள். லூக் 8-ம் அதிகாரத்தில் இயேசு சென்ற இடமெல்லாம், அப்போஸ்தலர்களும், சீடர்களும் சென்ற இடமெல்லாம், மதலேன் மரியாளும் சென்று கொண்டிருந்தாள்.

ஆனால், மதலேன் மரியாள் இயேசுவை பற்றிக் கொண்டிருந்த விதத்தில் வித்தியாசம் இருந்தது. அவர் எதை விரும்புகின்றாரோ அதை செய்து, அவர் எதை வெறுக்கின்றாரோ அதை வெறுத்து, இயேசுவின் மனதிற்கு உகந்தபடி வாழ்ந்தாள் - தி.பா 37:31. 




மேலும், இயேசு கிறிஸ்துவிடமிருந்து பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் பெற்ற அனுபவத்தைவிட, மதலேன் மரியாள் பெற்று கொண்ட அனுபவம் வித்தியாசமானது – யோவா 20:2 - கல்லறைத் தோட்டத்தில் ஒரு புதிய அனுபவத்தை மதலேன் மரியாள் பெற்றாள். கல்லறைத் தோட்டம், மதலேன் மரியாள் வழியாக ஒரு புதிய அனுபவத்தை கொண்டு வந்தது. உலகிற்கு உயிர்ப்பின் செய்தியை அறிவித்த முதல் விசுவாசி மதலேன் மரியாள் - யோவா 20:18.

உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன் என்று சொன்ன சீடர்கள் அவரை விட்டு விட்டு சென்று விட்டார்கள். அனேக அற்புதங்களும், அருங்குறிகளும் செய்து அவருக்கு பின்னால் சென்றவர்களால் உயிர்ப்பின் அனுபவத்தை பெற முடியவில்லை. ஆனால், மதலேன் மரியாள் தன்னை முழுமையாக கடவுளிடம் கையளித்து, உலகில் உள்ள எதையும் எதிர்பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும் தொடர்ந்து பங்கு கொண்டாள் - யோவா 20:1.

கல்லறை தோட்டத்தில் அவளுடைய உள்ளம் இயேசு கிறிஸ்துவை தேடிக்கொண்டே இருந்தது. இயேசுவை ஏக்கத்தோடு தேடி, அவள் ஓர் உயிர்ப்பின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள் - யோவா 20:15. அதனால் உண்மை உயிர்ப்பை அவளால் அனுபவிக்க முடிந்தது. உலக வாழ்க்கையை பொறுத்தவரையில் அத்தனைபேரும் அவளை கல்லெறிந்து கொல்வதற்கு நினைத்தார்கள். அவள் ஏற்கனவே செத்து போனவள் - யோவா 8:5. இயேசுவின் சடலத்தைக் கூட, தனக்குச் சொந்தமாக்க, அவள் ஆசித்தாள். அவள் ஒரு இயேசு பைத்தியமாக இருந்தாள்.

இயேசு தோட்டக்காரனாக நின்று கொண்டிருந்தார். அவளுடைய பெயரை உச்சரித்து அழைத்தபோது, இயேசுவை அவள் கண்டு கொண்டாள் – யோவா 20:16. இயேசுவினுடைய பாடுகளில் பங்கு பெற்றதால் மதலேன் மரியாள் இயேசுவின் உயிர்ப்பிலும் பங்கு பெற்றாள். பாடுகளில், எதற்கும் பயப்படாமல் அஞ்சா நெஞ்சத்தோடு துணிந்து இயேசுவை தேடியதால் உயிர்த்த இயேசுவை கண்டு கொண்டாள் - ஆமோஸ் 5:6. இதனால், மதலேன் மரியாள் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கி விட்டாள். அவளுக்கு பின்னால், ஒரு கூட்டம் மக்கள் உயிர்த்த இயேசுவைப் பெற்று, உயிர்ப்பு அனுபவத்தில் வாழ்ந்தார்கள்.



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !
நாம் நம்முடைய அன்றாட பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது, நமக்குள் இருக்கின்ற மாமிச கட்டுகள், சரீர சுபாவ குழப்பங்களை தேவன் பெலன் குன்ற செய்து, உயிர்ப்பு வாழ்க்கையில் வழிநடத்துவார். உலக கட்டிலிருந்து தப்பிய நாம், மீண்டும் பேயின் வலையில் சிக்குண்டு, அதற்கு அடிமைபட்டால், முந்திய நிலையை விட பிந்திய நிலை ஆபத்தானது.

எனவே, நம்முடைய சுய சுதந்திரத்தை இயேசு கிறிஸ்துவின் காலடியில் ஒப்புகொடுத்து, அன்றாட பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய உள்ளும் புறமும் எல்லா கட்டுகளையும், எதிர்த்து போராட ஆயத்தமாகும் போது, தேவன் ஓர் உயிர்த்த வாழ்வை நமக்குத் தருவார். மதலேன் மரியாள் உலகத்திற்கு ஒரு புதிய ஆத்மீகத்தைத் தந்தாள். மதலேன் மரியாளிடம் இருந்த ஆத்மீகம் நமக்கும் தேவைப்படுகிறது. ஒரு விசுவாச கூட்டத்தை உருவாக்கி, விசுவாச கூட்டத்திற்குள் வாழ்வோம். மதலேன் மரியாளை பெயர் சொல்லி அழைத்து திடப்படுத்திய தேவன், நம்மிடமும், அஞ்சாதே, கலங்காதே, நான் உன்னோடிருந்து, கரம் பிடித்து நடத்துவேன் என உறுதிபடுத்துவார். உலகம் முடிந்த பிறகு, அல்லது நாம் இறந்த பிறகு, உயிர்ப்பு வாழ்க்கை கிடைக்கும் என்றல்லாமல், இந்த பூமியில் இருக்கும்போதே! உயிர்த்தவர்களாய் வாழ்வோம். ஆமென்!

நன்றி http://www.catholicpentecostmission.org/Uyirpin_anubavam.html